கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

சமீபத்தில் நடந்து முடிந்த யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் ராஜபக்சவின் கட்சி, டக்ளஸ் குழுவுடன் கட்டாயக் கூட்டணி வைத்து இரண்டாயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்த நேரத்தில் யாழ் மக்கள் ,தமிழின படுகொலைகளை நடாத்திய ராஜபக்ச மற்றும் அதன் துணை ராணுவக் குழுக்களுக்கு வாக்களித்து ,பல்வேறு மட்டங்களிலும் வியப்பலைகளை உருவாக்கி இருக்கின்றது.ஆனால் தேர்தல் முடிவுகளை நன்கு ஆராய்ந்தோமானால், ராஜபக்ச கட்சியின் தில்லுமுல்லுகள் வெட்ட வெளிச்சமாகும்.

யாழ் மாநகர சபைக்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் ஒரு லட்சம். வாக்களித்தொரோ 22000 , இதில் ராஜபக்ச கட்சி 10600 , தமிழ் தேசிய கூட்டமைப்பு 8000, முஸ்லிம் சுயேச்சைக் குழு 1100 ,ஆனந்தசங்கரி 1000 என வாக்குகளை பெற்றிருக்கின்றனர். இந்த தேர்தலில் ஏறத்தாள 3000 முஸ்லிம் சகோதரர்கள் , புத்தளத்திலிருந்து வாக்களித்து 5 ஆசனங்களை முறையே ராஜபக்ச கட்சியிலிருந்து 4 மற்றும் முஸ்லிம் சுயேச்சைக் குழுவிடமிருந்து 1 எனப் பெற்றிருக்கின்றனர். எனவே இந்த 3000 வாக்குகளில் 2000 வாக்குகள் ராஜபக்ச கட்சியிக்கும் 1000 வாக்குகள் முஸ்லிம் சுயேச்சைக் குழுவுக்கும் சென்றதாக எடுத்துக்கொள்ளலாம். ஆக, ராஜபக்ச கட்சி பெற்றது 8600 தமிழ் வாக்குகளையே.

ராஜபக்ச கட்சி கைப்பற்றிய தமிழ் வாக்குகள் கூட நீதிக்கு புறம்பாக பெறப்பட்டனவே. தேர்தலுக்கு முந்தியவாரம் ஏறத்தாள 3000 மக்கள் வவுனியா முட்கம்பி முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்டு யாழ் குரு நகரில் குடியமர்த்தப்பட்டனர். அவர்கள் அவ்வாறு மீள் குடியமர்த்தபடுவதற்கு காரணம் யாழ் தேர்தல்.அந்த மக்கள் ராஜபக்ச கட்சிக்கே வாக்களிக்கவேண்டும் என அச்சுறுத்தப்பட்டனர். அதில் 1500 பேர்களை வாக்காளர்களாக கொண்டால் , ராஜபக்ச மற்றும் டக்ளஸ் குழு பெற்றது 7000 வாக்குகளே. இதில் வாக்களிக்குமாறு அச்சுறுத்தப்பட்ட மீனவர்கள் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகள் எண்ணிக்கை வேறு.

இந்த நிலையில் வெறுமனே நாம் இவ்வாறான கூட்டிக் கழித்தல்களை மேற்க் கொள்ளாது , இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என சிந்திக்கவேண்டும். ஏனெனில் வெகு விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் இந்த காலப் பகுதியில் , முட்கம்பிகளுக்குள் அடைக்கபட்டிருக்கும் அந்த ௩.௫ லட்சம் மக்களும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வரை அடைத்து வைக்கப்பட்டு . ராஜபக்ச கட்சியிக்கு வாக்களிக்குமாறு அச்சுறுத்தப் படுவார்கள். இதை முறியடிக்க தமிழ் தேசிய வாதிகள் எல்லாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்