கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

தலைப்பை பார்த்தவுடன் , என்னடா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறானே என்று எண்ணாதீர்கள். அரை நாள் உண்ணாவிரதமிருந்து, அதை நேரடியாக தொலைக் காட்சியில் ஒளிபரப்பி , போர் நிறுத்தம் ஏற்ப்பட்டது எனக் கூறி மதிய உணவுக்கு வீட்டுக்கு நடையை கட்டும் ஆத்மாக்கள் மற்றும் அதை நம்பி புளாங்கிதம் அடையும் புத்திசாலிகள் வாழும் காலத்தில் இது மட்டும் ஏன் சரியாக இருக்க கூடாது என வரலாற்று ரீதியாக ஆராய்வோம் .

முதலில் இலங்கை அணி , 1996 உலகக் கிண்ணம் வென்றபோது போது இருந்த சூழ்நிலைகள் பாப்போம். யாழ் நகரம் சிங்களப் படைகளால் கைப்பற்றப் பட்டு , தமிழர்களின் பண்டைக் கால தலைநகரை கைப்பற்றி விட்டோம் என்று சிங்கள இனவெறி பெரும்பான்மை சிங்களரிடம் குடியிருந்த காலம் அது. கொழும்பு நகரெங்கும் தமிழர்கள் கடத்தப்பட்டு , வாவிகளில் பிணமாக மிதந்த காலம். இலங்கை ராணுவ அமைச்சர் , யாழ்ப்பாணத்தை வென்ற ஒரு சிங்கள மண்ணின் பெயரால் அழைக்கப்பட்டு , சிங்கள இனவெறி முதன் முறையாக அனைத்து சிங்கள மக்களையும் அணைத்துக்கொண்ட ஆண்டுதான் 1996.

அத்துடன் ரனதூங்கவின் தலைமையின் கீழ் , அரவிந்த , ஜெயசூரிய, களுவிதாரண, குருசிங்க, திலகரத்ன, மகாநாம, தர்மசேன, வாஸ், முரளிதரன் என அனைவருமே புதிய புதிய உத்திகளுடன் தம்மை நிருபித்து கிண்ணத்தை வென்றனர். சிங்களம் உலகத்தை வென்ற நாளாக அதிலும் இந்தியாவை மட்டம் தட்டிய திருப்தியில் தேசிய விழாவாக கொண்டாடப்பட்டது. யுத்தத்தில் வெற்றி , கிரிக்கட்டில் வெற்றி , எதிலும் வெற்றி என முழக்கமே எங்கும் எதிரொலித்தது.

இப்போது இந்த உலகக் கிண்ணத்தைப் பார்த்தோமானால் , யுத்த வெற்றியைப் பற்றியோ , சிங்கள இனவெறி பற்றியோ எவருக்கும் விளக்கத் தேவையில்லை. கிரிக்கட்டைப் பார்த்தல் , சங்ககாரவின் தலைமையின் கீழ் ( இவரும் ரனதூங்க போல பண்டைய சிங்கள தலைநகர் கண்டியை சேர்ந்தவர் ) ஜெயவர்த்தன, வித்தியாசமாக துடுப்பாடும் டில்ஷான், அனுபவமிக்க ஜெயசூரிய மற்றும் முரளி , அதிசய பந்து வீச்சாளர் மென்டிஸ் மற்றும் சாதிக்கத் துடிக்கும் இளைய வீரர்கள் என காணபடுகின்றது இலங்கை .

விளையாட்டில் அரசியல் எதுக்கு என்று அரசியல் புரியாத சில புத்திஜீவிகள் சொல்லுவார்கள். ஆனால் விளையாடே அரசியல் என்பது இன்றைய உலக நியதி. போலி தேச பக்தர்கள் தமது தாய் நாட்டுப் பற்றிக் காட்டி , முடியுமானால் தமது எதிரணியை உதைக்க முயலும் காலம் நமது காலம். இலங்கை இந்த உலகக் கிண்ணத்தில் வெற்றி பெற்றால் , தமிழின அழிப்பை கடவுளே பாராட்டுகின்றார் என்று மக்களுக்கு போதிக்க ஏராளமான அரசியல் வாதிகளும் புத்த சாமியார்களும் காத்திருக்கின்றனர். இந்தியா கூட போரை வென்று இலங்கை ஒன்றுபட்டதால் கிடைத்த வெற்றி சொல்லக்கூடும்.

இந்த வெற்றி மட்டும் கிடைத்தால் அது, முள்ளுக் கம்பிகளுக்குள்ளே சிறைப்பட்டு , அடுத்த வேளை உணவுக்கும் நீருக்கும் , அடிமைப் படுதியவனின் , உற்றார் உறவினரைக் கொன்று குவித்தவனின் கையை எதிர்பார்த்து ஏங்கி , எனக்கொரு விடியல் வராதா எனத்தவிக்கும் எமது உறவுகளின் துன்பங்களை மறைக்கவே உதவப் போகின்றது.தமது நாடு அணியின் வெற்றி தமது இருப்பை கேள்விக்குள்ளாகும் எனப் பயந்து நாட்களை கழிக்கும் இன்றைய ஈழத் தமிழரின் நிலை உலகில் யாருக்கும் வரக் கூடாது.

14 comments:

foto you published says all the story :-(

பெருமூச்சை விட எதைத்தான் நாம் செய்ய முடியும் ???

தயவு செய்து இந்தியர்கள் நீங்கள் உங்கள் வேலைகளை பார்த்து கொண்டு இருங்கள். இங்கே நங்கள் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுத்து விடாதீர்கள். சும்மா உங்களுக்கு ஹிட் வர வேண்டி பொய் தகவல்கள் கொடுத்து கிண்ட வேண்டாம். ஒரு உதாரணம் ரணதுங்க கண்டி இல்லை. கம்பஹ மாவட்டத்தை சேர்ந்தவர். இங்கே இலங்கையில் போட்டியில் நாங்கள் வெற்றி பெற ஆவலுடன் இருக்கிறோம். உங்கள் இந்திய தோல்வி கண்ட பொறாமையில் இப்படி எல்லாம் பேச வேண்டாம்

வணக்கம் யோ , நீங்கள் ரனதூங்க கம்பஹா என்றால் , சங்ககார மாத்தளையை சேர்ந்தவர், ஆனால் அவர்கள் இருவரும் கண்டி சிங்கள பரம்பரையை சேர்த்தவர்கள். இலங்கை அணிக்கு உங்களைப் போன்ற உண்மையான ரசிகர்கள் இருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக பாக்கிஸ்தானில் பலியிட அனுப்பப்பட்ட இலங்கை அணி பற்றி உங்களுக்கு தெரியும் தானே ?ஆனால் அது அரசியலாக்கப்பட்டு தமிழர்களுக்கு மேலும் வேதனையை கொடுப்பதாக அமையக் கூடாது.

இன்று அரை இறுதி ; பார்ப்போமே .......

அரை இறுதியைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்....

என்ன செய்ய, பாகிஸ்தான் வென்றாலும் வருத்தம் தான் இலங்கை வென்றாலும் வருத்தம் தான்...

ஹ்ம்ம் நமது நிலைமை :-(

நீங்கள் சொன்னதுதான் நடக்கப் போகிறதோ தெரியவில்லை கண்டும் கானான்

எனக்கு கிரிக்கெட்டில் இலங்கை வென்றால் கூட கவலையில்லை. வெற்றி ஆரவாரங்களில் எமது மக்களின் மரண ஓலம் அடக்கபடுமோ என்னும் போது தாங்கமுடியவில்லை நந்தன்

இப்படி மடத்தனமான விமர்சனங்களை போடுவதில் தெரிகிறது உங்களது மன வருத்தம்.
ரியல் ஸ்ரீ லங்கன்.

மடத் தனமான விமர்சனம் என்று எதைச் சொல்லுகின்றீர்கள்? பாதிக்கப்பட்ட மக்களின் அவலம் உங்களுக்கு தெரியாதா? அரசாங்கம் சொல்வது போல புலிகளே காரணம் என்று சொல்லிவுட்டு கண்களை மூடிக் கொள்ளாதீர்கள். இந்த அரசு , சொந்த மக்களென கருதியிருந்தால் இவ்வாறு கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்து தற்பொழுது நூறு பேர் மட்டுமே கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கின்றது. நீங்கள் உண்மையான இலங்கையனாக இருந்தால் இலங்கையில் யார் துன்பப் பட்டாலும் , அதற்காக வருத்த வேண்டும்.

now are you happy? you expected this?

இலங்கை கிரிக்கெட்டில் தோற்கவேண்டும் என்று இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக அந்த வெற்றியை இவர்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்துவார்கள் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டதே இந்த பதிவு.